Wednesday, July 20, 2011

பாசமலர்

"அன்பு மலர் ஆசை மலர் இன்ப மலர் நடுவே அருளோடு மலர்வது தான் பாச மலரம்மா" என்ற பாடல் வரிகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் கணீரென்ற குரலில் ஒலிக்க ஆரம்பிக்கிறது, ஏ.பீம்சிங் இயக்கத்தில் மெல்லிசை மன்னரின் இசையுடன் கலந்து உருவாகி 1961ஆம் ஆண்டு வெளிவந்த தனது தங்கைக்காவே வாழ்ந்த ஒரு அண்ணனின் கதையான பாசமலர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, காதல் மன்னன் ஜெமினி கணேசன், டணால் தங்கவேலு, எம். சரோஜா, எம்.என். நம்பியார், எம்.என். ராஜம், பி.எஸ்.ஞானம், பக்கோடா காதர் மற்றும் பலர் இப்படத்தில் திறம்பட நடித்துள்ளனர்.

தாய் தந்தையரை இளம் வயதிலேயே இழந்த ராஜூ (சிவாஜி கணேசன்) சிறு வயது முதலே தன் தங்கையை (சாவித்திரி) தாயாகவும் தந்தையாகவும் இருந்து வளர்க்கிறான்.

இருவரும் வாலிப வயதை அடைந்த நிலையில் ஒரு காட்சியில் சாவித்திரி உறங்குவதைப் பார்க்கும் சிவாஜி தன் தங்கையின் சீரான வாழ்வு பற்றி மனதில் எண்ணிப் பாடும், "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்" என்ற பாடல் தமிழ் மக்களின் மனதைத் தொடும் வண்ணமாக அமைந்துள்ளது.

சிவாஜி ஓரே புன்னகையில் தங்கை மேல் அண்ணன் கொள்ளும் பாசத்தின் மகிமையை இப்பாடல் காட்சியில் உணர்த்தி விடுகிறார். தொழில்நுட்பம் மிகவும் முன்னேறாத அக்காலத்திலேயே கருப்பு வெள்ளையிலும் இக்கனவுக் காட்சி மிக அற்புதமாக, பார்ப்பவர் வியக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

ராஜூவுடன் ஒரு தொழிற்சாலையில் சக தொழிலாளியாக வரும் ஆனந்தன் (ஜெமினி கணேசன்) சாவித்திரி மேல் காதல் கொள்கிறார். பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலாவுடன் இணைந்து பாடிய "யார் யார் யார் அவள் யாரோ, ஊர் பேர் தான் தொ¢யாதோ" என்ற இனிமையான பாடலுடன் அவர்களது காதல் காட்சி இடம் பெறுகிறது.

ஜெமினி தன் அத்தை (பி.எஸ்.ஞானம்), மற்றும் அத்தை மகன் (தங்கவேலு) ஆகியோருடன் வசிக்கிறார். ஒரு சமயம் தொழிற்சாலையில் ஸ்டிரைக் ஏற்பட்டு தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. ஜெமினி கணேசன் வெளியூர் சென்று விடுகிறார்.

சாவித்திரி தன் அண்ணன் தனக்குக் கொடுக்கும் பணத்தில் சிறிது சிறிதாக சேமித்தும், அருகிலுள்ள ஒரு பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தின் பொம்மைகளுக்கு வர்ணம் பூசும் வேலை செய்தும் சேர்த்த தொகை ஆயிரம் ரூபாயில் இருவரும் சேர்ந்து தனியாக பொம்மை தயாரிக்கும் தொழிலைத் தொடங்குகின்றனர். தங்கை தனக்குத் தரியாமல் வேலைக்குச் சென்றதற்காகக் கோபம் கொள்ளும் சிவாஜி அவள் ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருப்பதை அறிந்ததும் "ஆயிரம் ரூபாயா?" என்று வாயைப் பிளக்கும் காட்சி சபாஷ்.

தங்கை சேர்த்த ஆயிரம் ரூபாயில் பொம்மை செய்யும் தொழிலை மும்முரமாக இருவரும் செய்வதாக அமையும், "எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே" என்ற இனிமையான பாடல் வரிகள் நம் அனைவருக்குமே வாழ்க்கையில் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதை விளக்கி நம்பிக்கையூட்டுவதாகவும் பிறருக்கு உதவும் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும்
அமைட்ந்துள்ளது.

பொம்மை வியாபாரத்தில் வெற்றி பெற்ற சிவாஜியிடம் அவரது முன்னாள் தொழிற்சாலை முதலாளி தனது தொழிற்சாலையை விற்கிறார். வெளியூரிலிருந்து வேலை கிடைக்காமல் திரும்பி வரும் ஜெமினி தங்கவேலுவிடம் சிவாஜியைப் பற்றி விசாரிக்க, தங்கவேலு கூறுகிறார், "ராஜுவா? மச்சான், இப்போ அவர் ராஜசேகர், பெரிய ஆளு. கோட்டும் சூட்டும் மாட்டிகிட்டு, கையில் சிகரெட்டுடன் டக், டக்குனு நடந்து வந்து, ஓரக்கண்ணால பாத்து ஹலோ ஹௌ டு யு டூன்னான், நான் ஆளைவிடுன்னு வந்துட்டேன்" என்பார்.

ஜெமினி சிவாஜியின் தொழிற்சாலையில் தனக்கு ஒரு வேலையை வற்புறுத்திப் பெறுகிறார். சிவாஜி கணேசனின் நண்பர் ஒருவர் எம்.என். நம்பியாரை சாவித்திரிக்கும் அவரது சகோதரி எம்.என். ராஜம் அவர்களை சிவாஜிக்கும் திருமணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார். இரு சகோதர சகோதரிகளையும் பரஸ்பரம் அறிமுகம் செய்யும் காட்சியில் எம்.என். ராஜம் தன் தோழியருடன் ஆடிப்பாட, அதற்கு சிவாஜி பியானோ வாசிக்க இசைக்கும் "பாட்டொன்று கேட்டேன், பரவசமானேன், நானதைப் பாடவில்லை" என்ற பாடலுக்குத் தானே பியானோ வாசித்த எம்.எஸ். விஸ்வநாதன் சிவாஜியின் பியானோ வாசிக்கும் தோரணையை மிகவும் அருமை என்று பாராட்டியுள்ளார்.

தன் தங்கையின் காதலை அறியவரும் சிவாஜி கோபம் கொண்டு ஜெமினியை அடித்து விடுவதோடு அவரையும் மற்றும் சில தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்து விடுகிறார். ஜெமினி பிற தொழிலாளர்களுடன் சேர்ந்து கொண்டு ஸ்டிரைக் செய்ய, அவரை உள்ளே அழைத்துப் பேசும் சிவாஜி, "காட்டிலே குழி பறிப்பது காட்டு யானைகளின் ஓய்வுக்காகவா? வில்லிலே நாணை ஏற்றி அம்பைப் பூட்டுவது புள்ளி மான்களுக்கு விளையாட்டுக் காட்டவா? இல்லை. இதுவெல்லாம் பிறர் துன்பத்திலே இன்பம் காண வேண்டும் என்ற வெறி, ஆனந்தா, நீ உன் ஆட்களுடன் சேர்ந்து கொண்டு இத்தொழிற்சாலையில் எரியும் மின்விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டாலும், சின்னன்சிறு அகல் விளக்கின் ஒளியில் ஒரே ஒரு தொழிலாளி மட்டும் ஓடியாடி வேலை செய்துகொண்டிருப்பான். அது தான் இந்த ராஜூ, நவ் கெட் அவுட்" என்று பேசும் வசனம் அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும்.

சாவித்திரிக்குத் திருமணம் நிச்சயம் செய்யும் தருணத்தில் வீட்டின் கொல்லைப்புரத்தில் ஜெமினி சாவித்திரியை சந்தித்துப் பேசுவார். அப்போது அவர், "நான் வேண்டுமென்றால் இப்பொழுதே என்னுடன் வந்துவிடு, உன் அண்ணன் தான் வேண்டுமென்றால் என்னை மறந்து விடு" என்று கூற சாவித்திரி, "வெறும் ஸ்பரிச உணர்ச்சியில் பிறந்த உங்கள் காதலை விட என் அண்ணன் என் மேல் கொண்டுள்ள பாசம் பெரியது. அவரை விட்டு என்னால் எங்கும் வர முடியாது. என்னை மறந்து விடுங்கள்" என்று கூறுவதைத் தற்செயலாக அங்கு வரும் சிவாஜி கேட்டு, தன் மேல் இவ்வளவு பாசம் கொண்டுள்ள தங்கையின் காதலை நிறைவேற்ற முடிவு செய்து ஜெமினி, சாவித்திரி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.

திருமணத்தில், "ஆனந்தா, என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கறேன். அதில் எப்போதும் ஆனந்தக் கண்ணீர்தான் வர வேண்டும்" என்று வேண்ட, "அது என் கடமை ராஜூ" என்று ஜெமினி கூற, அதைத் தொடர்ந்து எல்.ஆர். ஈஸ்வரி குழுவினரின் குரலில் ஒலிக்கும், "வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ, மணமேடை தன்னில் மனமே காணும் திருநாளைக் காண வாராயோ" எனும் பாடல் எத்துணை முறை கேட்டாலும் சலிக்காது.

அதன்பின் தன்னால் தடைபட்ட தன் அண்ணனின் திருமணத்தை முயற்சி செய்து முடித்து வைக்கிறார் சாவித்திரி. சிவாஜி, எம்.என். ராஜம் இருவரது முதலிரவுக் காட்சிக்கு அறைக்கு வெளியில் இருந்து கொண்டு ஜெமினி சிதார் வாசிக்க சாவித்திரி பாடும், "மயங்குகிறாள் ஒரு மாது, தன் மனதுக்கும் செயலுக்கும் உறவும் இல்லாது" என்ர பாடல் கேட்கக் கேட்கத் தெவிட்டாத இசையமுதாகும். தங்கையின் திருமணம் முடிந்ததும் ஜெமினியும், சாவித்திரியும் தன்னுடனேயே ஒரே வீட்டில் இருக்கும்படி சிவாஜி மன்றாடிக் கேட்க, அதன்படி அவர்களுடன் தங்கவேலுவும், அவரது தாயாரும் சேர்ந்து விட, மாமியார் கொடுமை சாவித்திரிக்கு ஆரம்பமாகிறது. மெட்டி ஒலி மாமியாரெல்லாம் இந்த மாமியாரிடம் பிச்சை வாங்க வேண்டும், அப்படி ஒரு போடு போட்டிருக்கிறார் பி.எஸ். ஞானம்.

எம். சரோஜாவின் மேல் காதல் வயப்படும் தங்கவேலு சரோஜாவின் வீட்டு நாய்க்குட்டியைத் திருடி, ஒரு சாக்குப்பையில் கட்டிக்கொண்டு பேருந்தில் வரும் வழியில் வேறொருவர் டிக்கட் காசை மிச்சப்படுத்த வேண்டித் தன் மகனை ஒரு சாக்குப்பையில் கட்டிக்கொண்டு வர, சாக்குப்பைகள் இடம் மாறி வீட்டுக்கு வந்து சாக்குப்பையைப் பிரிக்கும் தங்கவேலு மொட்டைத்தலையுடன் சாக்குப்பையிலிருந்து வெளிவரும் சிறுவனைக்கண்டு அதிர்ச்சியுற, அதே சமயம் சரோஜாவின் தந்தை போலீசுடன் வர, சாக்குப்பை இடம் மாறிய பையனின் தந்தையும் அங்கு வர ஒரே கலாட்டா. தங்கவேலுவை சிவாஜி கண்டிக்க, ஜெமினி கோபித்துக்கொண்டு தான் வெளியே செல்வதாகக் கூற சிவாஜி தன் தங்கைக்காக விட்டுக் கொடுத்துத் தன் மனைவியுடன் வெளியேறி வேறு வீட்டில் சென்று தங்குகிறார்.

இத்தருணத்தில் அமைகிறது சிவாஜியும் சாவித்திரியும் வெவ்வேறு வீடுகளில் தங்கள் குழந்தைகளைத் தாலட்டும் பாடலான, "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - வந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக விளைந்த கலையன்னமே, நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே - வளர்ப் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே" என்ற கவிஞர் கண்ணதாசனின் கற்பனை வளத்திற்குச் சிகரமாய் அமைந்த பாடல்.

மாமியார் கொடுமை எல்லை மீறி, சாவித்திரியை ஏமாற்றி அவரிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, தங்கவேலுவின் உதவியுடன் சொத்து கேட்டு வழக்குப் போட, தன் சொத்தையெல்லாம் தங்கையின் பெயருக்கே எழுதிக் கொடுத்து விடுகிறார் சிவாஜி.

எம்.என். ராஜம் வெளி நாட்டில் தன் டாக்டர் படிப்பைத்தொடர வாய்ப்பு வரவே, அவரை விமானத்தில் வழியனுப்பிவிட்டுத் தன் ஒரே மகனுடன் மன நிம்மதி தேடித் தீர்த்தயாத்திரை செல்கிறார் சிவாஜி. யாத்திரை முடிந்து மன நிம்மதி கிட்டாமல் நலிந்த உடலுடன் திரும்பும் சிவாஜி தங்கையைப் பார்க்க அவரது வீட்டுக்குச் செல்கையில் மாமியார் அவரை உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிடுகிறார்.

இந்நிலையில் சிவாஜி கண்பார்வையை இழக்க நேரிடுகிறது. அண்ணன் தன்னைக் காணவந்ததை மாமியார் வாயிலாகக் கேட்டறிந்த சாவித்திரி மாமியாரைக் கடிந்துகொண்டு அண்ணனைக் காணச்செல்கையில், தன் மகனுக்குத் தன் தங்கையின் மகளை மணம் முடிக்க விருப்பம் தெரிவித்து, பேரக்குழந்தைகளுடன், "கை வீசம்மா, கை வீசு.." என்று கொஞ்ச விரும்புவதாகக் கூறிப்பின், "எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்" என்ற பாடல் வரிகளை உணர்ச்சி மிகுந்த குரலில் உச்சரித்துக் கொண்டே தங்கையின் மகளைக் கையில் வைத்துக்கொண்டு ஆடிப்பாடும் சிவாஜி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிர்விடுகிறார்.

"அண்ணா, அண்ணா" என்று கதறி சாவித்திரியும் அண்ணன் மேல் விழுந்து உயிர்நீக்க, "தங்கை உயிர் நினைத்து தன்னுயிரை வைத்திருந்தான், அண்ணன் வளர்த்த உயிர் அவனுடனே சென்றதம்மா" என்ற பல்லவியுடன் ஆரம்பித்து டி.எம். சௌந்தரராஜன் குரலில் சோகரசத்துடன், "மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழவைத்தான் என்று அமைதி கொண்டாள்" என்ற பாடல் ஒலிக்க அண்ணன் தங்கை இருவரின் ஆவி உடல்களும் மேலுலகம் செல்வது போன்ற காட்சியைக் குழந்தைகள் இருவரும் காண்பதாக நிறைவு பெறுகிறது பாசமலர்.

இந்த இறுதிக் காட்சி ரசிகர்களின் மனத்தைத்தொடுவதாய் அமைந்துள்ளது. நடிப்புத்துறைக்குப் பல்கலைக் கழகமாய் விளங்கிய நடிகர் திலகம் இத்திரைப்படத்தில் வழங்கியுள்ள பாடங்கள் ஏராளம்.

No comments:

Post a Comment

Lorem

Lorem

About This Blog